Thursday, May 28, 2015

Kalaignar madal: On RKNagar Bye Election..

உடன்பிறப்பே,

பெரும் ஆய்வுக்குப்பிறகு, வரும் இடைத்தேர்தல், கெடுமதி ஆட்சியாளர்களின் கடைத்தேர்தல் என்றுணர்ந்ததாலேயே, கழகம் இதை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இதை எதோ இந்த இனமானத்தமிழனின் புறமுதுகிட்டு ஓடிடும் செயல் என்று ஊடங்களின் வஞ்சிக்கும் செய்திகளை நீ நம்பி வெம்பிவிடாதே.

ரா.கி.நகரில் ஏன் போட்டியிடவில்லை என்று புலம்பும் கெடுமதியாளர்கள், பெண்ணாகரம் என்ற சரித்திரசான்றை மறந்தது அவர்தம் கயமை அன்றி வேறல்லவே ! இடைதேர்தல்களை, நாம் ஆட்சியில் இருக்கும்போது மட்டுமே சந்திக்கவேண்டும் என்று ஆதித்தமிழனுக்கும், அம்மையாருக்கும் கற்றுத்தந்தனவல்லவா இந்த கடைத்தொண்டன் ? அதை முற்றிலும் மறந்து இன்று கொக்கரிக்கும் அம்மையாரின் நக்கலை நீ இனம் கண்டுகொள்ள வேண்டும்.

இருதலைக்கொள்ளி எறும்பு போல் நாம் இருப்பது குடும்பத்திலுள்ள இரு தலைகளில் எது பெருந்தலை என்ற கேள்விக்கு விடை காணமுடியாமல் மறத்தமிழன் இருப்பதால்தானே ! இதை அறியாதோர் புலம்புவது அரை வேக்காட்டுத்தனமே!

ஆரியசக்திகள் இணைத்தளித்தில் ஒன்று கூடி, செய்யும் பொய் பிரச்சாரங்களை நீ கண்டுகொள்ளவேண்டும். போட்டியிடாவிட்டாலும், நீதிகாக்க போராடும் கழகத்துக்கு நிதி இன்றியமையாதது
என்று தெரிந்து நீ இன்றே
பொற்கிழி அளிப்பது, முற்றிலும் நன்றே
என்று நன்றி தெரிவிப்பது எம் கடமை அன்றே
அன்றி வேறில்லை.

இடைத்தேர்தல் கொடுங்கோலரின் கடைத்தேர்தல் !
நிரந்தர ஆட்சி, எமது மாட்சி....
நிரந்தர நிதி குவிப்பு, எமக்கு பெருமுவைப்பு,

கடைத்தொண்டன்,

கட்டுமரம்.

Sunday, May 24, 2015

Kalaignar Madal: Requesting for a permanent term..

(Hilarious but he actually said this to his party cadres - give him a permanent term).

உடன்பிறப்பே,

வாழ்வோம் உழைத்து என்றுள்ள தொல் தமிழர் பரம்பரையில் வந்த கழகத்தை, வாழ்வோம் வழக்கினால் (சொத்து குவிப்பு) என்று மாற்றிய, வாழை மட்டைகள் நன்கு சிந்திக்கவேண்டும்.
 
மெய்ஞானம் போலி என்று பகுத்தறிவு போற்றியும், விஞ்ஞான முறையை சற்றும் கைவிடாமல், சொதுக்குவித்தவனல்லோ இந்த திருக்குவளைக்காரன்? இதுவரையில் நிலைத்த வழக்கு ஏதேனும் உண்டா சேர்க்காத சொத்துத்தான் உண்டா என்று மறத்தமிழன் சற்று யோசிக்கவேண்டாமா ? தம்பி நீதியரசர் சர்க்காரியா எழுதிய பாராட்டு மடலை அறிந்தவர்க்கு இதில் வியப்பேது ? குடும்பத்தில் (கழகத்தில்) இருப்போருக்கு வியப்பு வராமல், வாய்ப்பளிப்பதையே "மக்கள் பணி மகேசன் பணி" என்று திளைத்து வாழ்பனல்லவோ இந்த கடைத்தொண்டன் ?

இந்நிலையில், கழக ஆட்சியை சற்று நினைவு கொள்ளவேண்டும். முழு பெரும்பான்மை இருந்தும், பாதியில், மீதி வைத்து அடிபிடிகளிடம் ஆட்சியை விட்டு ஓடிய அம்மையாரெங்கே - பெரும்பான்மை இல்லாமலேயே, கூடா நட்பு இருந்தும் ஐந்தாண்டு முடித்த கழகத்தின் சாதனை எங்கே ? சம்சாரங்களில் இருந்து தொடங்கி, மின்சார நிறுவனங்கள் வரையில் அனைத்தையும் பராமரித்த கழகமேங்கே. அனைத்தையும் அரசே செய்யும் என சூளுரைத்து மின்சார கதியில் பணிகள் மட்டுமே செய்யும் அம்மையாரெங்கே. இதற்க்கு வேண்டாமா நிரந்தர தீர்வு ?

யோசித்துப்பார், குடும்பம் பெருகுகிறது, தமிழ் நாட்டை வட - தென் என்று பிரித்து இரு மைந்தர்கள் ஆண்டும் எத்தனை இன்னல்கள் ? இடையில் தேர்தல் வேறு, செலவு வேறு. தமிழ் நாட்டை முழுவதும் திருமங்கலம் ஆக்கிய எமது பணியை வெட்கமில்லாமல் தொடரும் அம்மையார் தேவைதானா ? தமிழன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாழைமட்டை ஆகி, சோற்றாலடித்த பிண்டமாகும் அவலம் நமக்கு தேவை தானா ?

இதற்க்கு ஒரேவழி என்னவென்று நான் விடுத்த அறைகூவலுக்கு நீ பொற்கிழி என்று தின் தோள் புடைக்க ஒலித்தது இன்றும் என் செவிகளில் தேனாய் பாய்ந்தாலும், தமிழர் நலம் கருதி நிரந்தர தீர்வு காண்பது எமது கடமையன்றோ ! ஆகையாலே எமது குறிக்கோள் "நிரந்தர ஆட்சி". ஆண்டாண்டு காலமாக கோலோச்சிய கடைத்தொண்டன் இன்றும் குடும்பத்தில் எழுதிவைக்க்வேண்டியது உயிலா, பாகப்பிரிவினையா என்று தெளிவு இல்லாமல் தத்தளிக்கும் நிலை கேடு தேவைதானா ?

விழட்டும் உன் ஒட்டு ! எழட்டும் நிரந்தர ஆட்சி !!

அம்மையாருக்கும் நிரந்தர ஆட்சி தந்தால் என்னவென்று ஒலிக்கும் குரலை ஒழி, கழகமே வழி, கொட்டட்டும் உன் பொற்கிழி.

கடைத்தொண்டன்
கட்டுமரம்.

Monday, May 11, 2015

Kalaignar Madal #7: On jaya verdict shock....

உடன் பிறப்பே,

நேற்றேழுதிய மடல் முற்றிலும் மை காயுமுன்னே, சற்றிலும் எதிர்பாராமல் இன்னொரு கயமை !!!

வந்தது தீர்ப்பா, தீர்வினையா அல்லது கழகத்துக்கு வந்த பெரும் வினையா என்று நீ அச்சப்படுவாயோ என்று எமக்கு எழுந்த கூச்சத்தால் எழுதிய மடல் இது.

திராவிடம் அனைத்தும் ஓரினம் என்று ஆரம்பித்த கழகம் இன்று வேரிடமாகி, திக்கி திளைத்து திசைமாறி தத்தளித்து அலைகிறதோ என்ற அச்சம் தோன்றுகிறது. தமிழினம் வேறு திராவிடவினம் வேறு என்று தீய சக்திகள் சொல்லுக்கு, வில்லு பாட்டுக்கு ஆடும் மதிகள் போல, அதி திராவிடர் சிலரே, நீதியரசர்களாக கயமை செய்வதை எப்படி (குடும்பம்) கழகம் தாங்கும் ?

ஐயகோ ! எதையும் தாங்கும் இதயம் இன்றிருந்தால் மீண்டும் தனது உறக்கத்தை வென்று போராட்டம் தொடங்கி, அம்மையார் கொக்கரிப்பதை வீரவாட்டம் செய்து அடக்கியிருக்காதா ? அத்தகைய கழகமேங்கே, ஐம்பெரும் தலைவரெங்கெ ?

இந்த இன்னல்களுக்கிடையே, அம்மையாரின் எடுபிடிகள் செய்த அலங்கோலங்களை நினைவு கொள்வோம், ஏழையின் சிரிப்பினிலே இறைவனை கண்ட கழகம், பால்குடங்களையும், காவடிகளையும், பல்வேறு தேரடிகளுக்கருகே கண்ட கேவலம் அனைவருக்கும் தெரியும். மசூதிகளையும், தேவாலயங்களையும் மட்டுமே அணுகியிருந்தால் அதிலுள்ள நியாயம் எமக்கு முழுவதுமாக புரிந்திருக்கும்.

மீண்டும், கொல்வோம் மறைகளை,
நினைவுகொள்வோம் கழக சூளுரைகளை.
இந்து எதிர்ப்பு மட்டுமே எமது சக்தி,
குடும்பத்துக்கு பக்தி
இதுவே கழகத்தின் அரசியல் யுக்தி,
இதனாலேயே இன்னாள் வரை எமக்கு முக்தி

என்பது உலகறிந்ததல்லவே !

மீண்டும் தமிழன் சோற்றால் அடித்த பிண்டமான அலங்கோலம், கண்டு கொக்கரிப்பவரின் குதூகலம், கேவலம்.

இது ஒன்றும் புதிதல்ல எமக்கு,
விழட்டும் எம்மேல் இந்த பழி,
கொட்டட்டும் உனது பொற்கிழி ...

கடைத்தொண்டன்,


கட்டுமரம்.

Sunday, May 10, 2015

Kalainga madal 6: On Jaya judgment in Karnata HC...

உடன்பிறப்பே,

இன்று நாள், தமிழகத்துக்கு பொன்னாளோ, மண்-நாளோ என்பதை கர்நாடக நீதியரசர்தான் தீர்மானிக்கவேண்டிய கேவலமான நிலையில் கழகம் இருப்பதை, காவிரிக்கு கையேந்தும் தமிழர்கள் நினைவு கொண்டு சிந்திக்கவேண்டும்.

நீதியரசர் - நீதியின் வழி நடந்து, அதை நிலைநாட்டி, மனுநீதி வழி நடப்போரை தண்டிப்பதே ஆதி-தமிழனின் இச்சை, கழகத்தின் ஒரே மூச்சு.

அம்மையார் குவித்ததோ பெரும் சொத்து, ஆனால் என்னிடம் உள்ளது வெறும் தயிர் மத்து
என்று பொய்யுரைத்ததை,

பேரியத்தின் சதியை மேரியின் வழி நடக்கும் உத்தமர் - நீதியரசர் தவறே என்றபிறகும்,
மேல்முறையிட்டு, வேல்மறை வழிபடும், குமாரசாமி வந்தபோதே எமக்கு சந்தேகமே.

ஆனால், "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்ற கொள்கை காரணமாக அடக்கம் கொண்டுள்ளதை, முடக்கம் என்று கயவர் சொல்வதை நம்பிடாதே.

எமது எதிர்பார்ப்பு, நல் தீர்ப்பு ! அது தமிழத்தை தர்மபுரியாக்குமா அன்றேல் மர்மபுரியாக்குமா என்று பார்க்க பொறுமை கொள்.

தமிழகத்து (கழகத்து) எதிர்காலம் குறித்து கவலையுடன்,
கடைத்தொண்டன்

கட்டுமரம்.